18.05.2013- முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் புலம்பெயர் தேசத்தில்
புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் உரையாற்றக்
கிடைத்த வாய்ப்பில் அவர் பின்வருமாறு உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர்
ஆற்றிய உரையின் முழுமையான தமிழ் வடிம் பின்வருமாறு
இன்று மே-18, என் இன மக்களாகிய ஈழத்தமிழர்களின் இருண்ட நாளின் நான்காவது ஆண்டு நினைவு நாள்.
2009 ஆம் ஆண்டு என்பது, எமது மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஐக்கிய
நாடுகளும் உலகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் ஒருபோதும்
மறக்கப்பட முடியாத ஆண்டாக உள்ளது.
(மே-18) உலகெங்கும் வாழ்கின்ற
தமிழ் மக்கள் இன்றைய நாளை அடையாளப்படுத்துவதற்காக எழுச்சி கொள்வார்கள்.
21வது நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை இதுவென்பதை இந்த உலகம் விரைவாகவோ,
காலம் தாழ்த்தியோ உணரத்தான் போகிறது.
தமது அண்மைய அறிக்கையில்
(பெற்றி அறிக்கை) ஐக்கிய நாடுகள் தமது பயங்கரத் தவறுகளை ஏற்கெனவே ஏற்றுக்
கொண்டுள்ளன. அத்துடன், 70,000 ற்கும் மேற்பட்ட மக்கள்
கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் சுட்டிக்காட்டுவதாகவும்
அது கூறியுள்ளது.
அவை சர்வதேச சமூகத்தில் மனிதநேயத்துக்கான எந்த
அக்கறையோடும், நீதிக்கான எந்தக் கருசனையோடும் - பிரித்தானிய காலனித்துவ
காலங்களிலிருந்து சிங்கள மேலாதிக்கத்திடம் பிரித்தானியாவால் ஆட்சி
வழங்கப்பட்டதிலிருந்து 60 ஆண்டுகளாக மோசமாக-மோசமாக உருவாகி - 2009 ஆம்
ஆண்டில் நடத்தப்பட்டது மிக மோசமான உச்சக்கட்ட இனப்படுகொலைத் தாக்குதல்
என்பதை விரைவாகவோ, காலம் தாழ்த்தியோ கற்றுக்கொள்வார்கள்.
இந்த
இனப்படுகொலை முன்னெடுப்பின் காரணமாகவே புலம்பெயர் தமிழர்களுள் பலர் தாம்
நேசித்த தாயகத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, உலக சமுதாயத்தின்
மனிதாபிமானப் பரப்பால் இந்த உண்மைகள் உணரப்படும் வரை ஒருபோதும் ஓயாது.
அவர்களுள் ஒருவனாக நான். இந்த இனப்படுகொலையின் உச்சக்கட்டத்தை எனது
குடும்பத்துடன் அனுபவித்தேன். எனது தந்தை கொல்லப்பட்டார். தாயார்
முள்ளிவாய்க்காலில் காயம்பட்டார். நான்கு தடவைகள் நான் காயம்பட்டேன். எனது
அம்மாவின் சகோதரியின் மகன் கொல்லப்பட்டார். மற்றுமொரு மகன் மோசமாகக்
காயம்பட்டார்.
நாங்கள் உணவு இன்றி, தண்ணீர் இன்றி, காயங்களுக்கு
மருந்துகள் இன்றி உயிர்வாழ முயற்சிப்பதற்காக நாங்கள்
பதுங்குகுழிகளுக்குள்ளே மறைந்துகொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் பிழைக்க
வேண்டியிருந்த அந்த கூட்டு வேதனைகளை இந்தக் குறுகிய நேரத்துக்குள்
விபரிப்பது எனக்கு கடினம்.
இன்னும், நான்கு ஆண்டுகள் கடந்தும்,
எனது சகோதரனும் சகோதரியின் கணவரும் இலங்கைப் படையினரின் சிறைக்குள்தான்
இருக்கிறார்கள். நான் பிறந்த மண்ணில் வாழமுடியாது, இலங்கைத் தீவை விட்டே
வெளியேற்றப்பட்டிருந்தேன். இன்று அந்நிய நாட்டில் புகலிடத்துக்காக
மன்றாடிக் கொண்டிருக்கிறேன். இதுதான் இலங்கையில் தமிழர்களின் நிலை.
நாங்கள் எங்களது கூட்டு சமூக கலாச்சார வாழ்க்கையை இழந்தோம், எங்கள்
குடும்பங்களை இழந்தோம், எங்கள் தாய்நாட்டில் வாழ்வதற்கான உரிமையை இழந்தோம்.
வரலாற்று ரீதியாக நாங்கள் உண்மை பேசுகின்ற ஒரு மக்கள். தயவுசெய்து எங்களை
உண்மை பேசவிடுங்கள். எங்களுக்குப் பாதுகாப்புக் கொடுங்கள், எனக்கு
பாதுகாப்புக் கொடுக்கள் எனவேதான் என்னால் உண்மை பேசமுடியும்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான எனது தொடர்பை நான் உங்களிடமிருந்து ஒருபோதும்
மறைக்கவில்லை. ஆனால், என்மீதான உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டு சற்று
வித்தியாசமாக இருப்பதை நான் உங்களுக்கு கூறவேண்டியுள்ளது.
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு இன்று நான்கு
ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் உறுதியாகத்
தமிழர்களிடமிருந்து எந்த ஆயுதச் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.
இனப்படுகொலைத் தாக்குதலின் பலியாட்களாக நாங்கள் இருந்தும், தமிழர்கள்
பயங்கரவாதிகளாக இருப்பதுபோல் வகைப்படுத்துவது சற்று வித்தியாசமாக இல்லையா?
இலங்கை அரச ஆயுதப் படைகளை நீங்கள் எப்படி விபரிக்கப் போகிறீர்கள்?
உண்மையிலே மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால், என்னைப் பற்றி நீங்கள்
உங்கள் மனதில் எழுப்பி வைத்திருக்கும் கேள்வி, பொதுவாகவே தமிழ் மக்கள்
குறித்து உலகப் பொதுசனத்தின் மனதிலும் உள்ளது.
நான் என்ன
கருதுகிறேன் என்பதை காட்டுவதற்காக நான் இணையத்தளத்தில் படித்த மிக
அண்மையில் வெளியான ஒரு கட்டுரையை நான் இங்கே பயன்படுத்துகிறேன்.
'உருவறித் நிக்கோல் இலங்கையில் விடுமுறைகள் பற்றி எழுதுகிறார், பிரித்தானிய
செய்தித்தாள் 'தி ஒப்சேவர்' இல் ஒரு 'Taxi' ஓட்டுநருடனான தனது
கலந்துரையாடலை விபரிக்கிறார்.
'நீங்கள் ஒரு புத்த மதத்தவரா?' அந்த ஓட்டுநரிடம் நான் கேட்டேன்.
'இல்லை. நான் ஒரு இந்து.'
'ஓ, அப்படியானால் நீங்கள் தமிழனா?'
'ஆம். நான் ஒரு தமிழன்,' என்கிறார் ஓட்டுநர், பின்பு சத்தம்போட்டுச் சொன்னார், 'ஆனால், நான் ஒரு பயங்கரவாதி இல்லை!'
திரு.நிக்கோல் தனது கட்டுரையில் பின்வருமாறு கூறி நிறைவு செய்கிறார். அந்த
ஓட்டுநர் ஒரு பயங்கரவாதி என ஒருபோதும் சிறுகணம் கூட நான் நினைக்கவில்லை,
ஆனால், அவர் அதைக் கூறியதில் ஓர் உலகத்தின் வலியை நான் கேட்டேன்.
பிரித்தானியா இலங்கைத் தீவைவிட்டு வெளியேறியதிலிருந்து முதல் 30 ஆண்டுகளாக,
தமிழர்கள் சிங்கள தேசத்திடமிருந்து தீவிர இனவாத வன்முறையை எதிர்த்து
அமைதியான காந்திய வழிமுறைகளை மட்டும் பயன்படுத்தி போராடினார்கள்.
பாகுபாட்டுச் சட்டங்கள், தமிழ் தேயிலைத் தொழிலாளர்களின் குடியுரிமைகளைப்
பறித்தல், தனிச் சிங்களச் சட்டம், தமிழ் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை
எடுத்தால் மட்டுமே பல்கலைக் கழகம் நுழைய முடியும் என்ற கோரிக்கை, அரச
ஆதரவோடு தமிழர் எதிர்ப்பு இனக்கலவரங்கள் - இவை அனைத்தும் அமைதியான
ஆர்ப்பாட்டங்களை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் போதே நிகழ்ந்தன.
30 ஆண்டுகளாக அமைதி முறை ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதையும் அடைய முடியவில்லை
என்பதை உணர்ந்து கொண்ட பிற்பாடு மட்டுமே தமிழர்களிடமிருந்து ஆயுதப்
போராட்டம் ஆரம்பித்தது. 30 ஆண்டுகளாக பலத்தோடு பலம் சந்திக்க வைக்கக்கூடிய
ஒரு நிலையில் இனவாதப் பயங்கரவாதம் தமிழர்களை நிறுத்தியது. போர் தமிழர்கள்
மீது திணிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள்
சித்தரிக்கப்படுகின்ற முறையை நான் நிராகரிக்கிறேன் - குறிப்பாக மேற்குலக
ஊடகத்தால். வெறிபிடித்தவர்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதக்
குழு என்றும் சித்தரிக்கிறார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்
மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறிவான, நவீன,
முன்னோடியான இயக்கம். அது இலங்கைப் படைக்கு எதிராகப் போராடிய அதேவேளை, சாதி
முறைமைக்கு எதிராகவும் பெண்கள் உரிமைகளுக்காகவும் மிகவும் கடினமாகப்
போராடியது.
25 ஆண்டுகள் கொண்ட தீவிர சமச்சீரற்ற போரின் பின்னர்,
தமிழர்கள் ஒரு பலம்வாய்ந்த நிலையை அடைந்ததும், தமிழீழ விடுதலைப் புலிகள்
என்ன செய்தார்கள்? சமாதான முன்னெடுப்பைத் தொடங்கினார்கள்! சர்வதேச
நாடுகளின் கண்காணிப்பில் 2002 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமாதான
முன்னெடுப்பு தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையான காலமாக இருந்தது.
சிங்களவர்களுக்கும் அது ஒரு நம்பிக்கையான காலமாக இருந்தது என நான்
கேள்விப்பட்டேன். ஆனால், ஆரம்பத்தில் சமாதான முன்னெடுப்புக்கு
முற்றுமுழுதான ஆதரவைக் காட்டிக்கொண்ட சர்வதேச சமூகம், அதன் நிலைப்பாட்டை
மாற்றியது.
2003 ல் தமிழ் மற்றும் சிங்கள பேச்சுவார்த்தையாளர்கள்
கைகளைக் குலுக்கிக் கொண்டிருந்த போது, உலகம் போரை நோக்கி வழிநடந்தது.
இலங்கை சமாதான முன்னெடுப்பின் இணைத் தலைமை நாடுகளுக்குள் பிரதான இரு வலுவான
நாடுகளுக்கிடையே பாரிய வேற்றுமைகள் நிலவின.
அமெரிக்காவும்
ஐரோப்பிய ஒன்றியமும் ஈராக் போர் தொடர்பாக சர்ச்சையில் இருந்தன. இந்த
சர்ச்சை இலங்கை சமாதான முன்னெடுப்பில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சமாதானம் தேவைப்பட்டிருக்கலாம் -
ஆனால், அமெரிக்காவும் பிரித்தானியாவும் விரிவடைந்து கொண்டிருந்த மத்திய
கிழக்குப் போர்களில் - பயன்படுத்த சுதந்திரமாக இருப்பதற்காக - தமிழர்
தாயகத்தில் உள்ள திருகோணமலை போன்ற மூலோபாயத் துறைமுகங்களில் அதிக
ஆர்வத்தைக் காட்டின.
இந்த வல்லரசுகள் துறைமுகத்தை அண்மித்த
பகுதியை விட்டு விடுதலைப் புலிகளை வெளியேற்றத் தேவைப்பட்டது என்பது
வெளிப்படையானது. எனவே, சமாதான முன்னெடுப்பானது வெட்கமின்றி அமெரிக்க கூட்டு
நாடுகளாலும் சிங்கள தீவிரவாத மேலாதிக்கவாதிகளாலும் திட்டமிட்டுத்
தாக்கப்பட்டது.
சமாதான முன்னெடுப்புக்கான இறுதித் தாக்கமானது
அமெரிக்காவும் பிரித்தானியாவும் விடுதலைப் புலிகளைத் தடை செய்ததிலிருந்து
ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய அழுத்தத்துக்குள் உள்ளான போதே ஏற்பட்டது.
அமெரிக்காவும் பிரித்தானியாவும் விடுதலைப் புலிகளை வெறிபிடித்தவர்கள்
என்றும் பயங்கரவாதிகள் என்றும் அழைப்பதற்கு ஒரு நீண்ட பாதை செல்வார்கள்
என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியும்.
ஆனால், நன்றாக அறிந்துகொள்ள வேண்டிய ஏனைய நாடுகள் வெட்கமின்றி அமெரிக்க வரிசையைப் பின்பற்றுவது உண்மையிலே மிகவும் கவலையாக உள்ளது.
பயங்கரவாதியாக விபரிக்கப்படக்கூடிய எந்தச் செயற்பாட்டிலும் நான் ஈடுபடவில்லை என்பதை உங்களுக்கு என்னால் கூறமுடியும்.
மேலும், என்னால் கூறிக்கொள்ளக் கூடிய விடயம் என்னவென்றால், பொதுமக்களை
மனிதக் கேடயங்களாகவோ அல்லது பலவந்தமாக சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற
எந்தச் செயற்பாடுகளிலும் விடுதலைப் புலிகளின் எந்தப் பகுதியும்
ஈடுபடுத்தப்பட்டது என்பதில் எனக்கு சிறுதுளி கூட அனுபவமில்லை.
இங்குள்ள ஒவ்வொருவரும் நான் சொல்லவேண்டிய விடயத்துடன் உடன்படுவார்களோ
அல்லது விளங்கித் தன்னும் கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், இந்த 21ஆம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலையின் இந்த நான்காவது
ஆண்டு நினைவு நாளில் - சற்று சுதந்திரமான ஆய்வைச் செய்யுமாறும் அத்துடன்,
புரிந்துகொள்ள முயற்சி செய்யுமாறும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால், என்னுடைய வழக்கு குறித்த ஒரு முடிவை நீங்கள் தற்பொழுது
எடுக்கமாட்டீர்கள் - ஆனால், அதைக்காட்டிலும் ஏதோவொரு விடயத்தில் அதிகமாக
முடிவுசெய்வீர்கள்.
நன்றி..இணையம்