Monday, 22 July 2013

கறுப்பு யூலை

துயரம் தோய்ந்த நம் ஈழத்தமிழினம் தன் வரலாற்றில் யூலை 83 இற்கு முன்னும் பின்னும் எத்தனையோ ஆயிரம் கோர இறப்புக்களை, சொத்துடமை இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றது, சந்தித்து வருகின்றது. சொல்லப் போனால் யூலை 83 இனை ஒவ்வொரு நாளும் நம் தமிழர் தாயகம் சந்தித்து வரும் வேதனை முடிவிலாத் தொடர்கதை.......


இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனச்சங்காரமே கறுப்பு யூலை.


சிங்கள ஆட்சிபீடத்தின், நன்கு திட்டமிட்ட நடவடிக்கையாக, அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடுமைக்கு பல்லாயிரம் தமிழர்கள் பலியாக்கப்பட்டனர்.
தமது கடுமையான உழைப்பால் தமிழர்கள் சேர்த்துவைத்த வளங்களை, செல்வங்களை, சொத்துக்களை, சிங்களக் காடையர்கள் கொள்ளையிட்டனர். தீவைத்து மகிழ்ந்தனர். தமிழ்மக்களின் பொருளாதார வளம் முற்றாக அழிக்கப்பட்டது.
சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்து, தென்பகுதியில் இருந்தும், மலையகப் பகுதிகளில் இருந்தும் தமிழர்கள், தமது தாயகம் நோக்கி அகதிகளாக விரட்டப்பட்டனர்.
எமக்கென்றோர் தாயகம் உண்டென்ற உண்மை வெளிப்பட்ட தருணம் அது. துன்பதுயரங்களுடன், உடல்காயங்களுடனும் மனக்காயங்களுடனும் வந்த தனது மக்களை, தமிழர் தாயகம், வரவேற்று மருந்திட்டது, உணவிட்டது. ஆதரவாய்த் தாங்கியது.
பல்லாயிரக்கணக்கானோர், இலங்கைத் தீவைவிட்டு, இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாக வெளியேறினர்.
வெலிக்கடைச் சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் ஐம்பத்திமூன்று பேர், சிறைச்சாலைக்குள் வைத்து இரண்டு கட்டங்களாக, மிருகத்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழ் மக்களுக்கெதிரான இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டுவிட்டு, வேடிக்கை பார்த்த சிங்கள அரசு, சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் சுயாதீனமான நீதி விசாரணைக் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்தது.
மாறாக, வெலிக்கடைச் சிறையிலும், ஏனைய பகுதிகளிலும், இனப்படுகொலையை முன்னின்று நடத்திய சிங்களக் காடையர்களுக்கு, வீடுகள், வசதிகள் வழங்கி, தமிழர் தாயகப் பகுதியில் குடியேற்றியது சிங்கள அரசு.
இருபத்தெட்டு ஆண்டுகளுக்குமுன், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கறுப்பு யூலைக் கொடுமைகளை தட்டிக்கேட்க மறந்த, சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற போக்கே, இன்று பன்மடங்கு கொடூரத்தை, கொடுமையை எம்மினம் முள்ளிவாய்க்காலில் அனுபவிக்க நேர்ந்தது.......

No comments:

Post a Comment