Sunday, 25 November 2012

இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக தமிழரின் இதயக் கோயிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள்

ஈழ விடுதலை வரலாறு மாவீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் தமிழரின் வரலாற்றை இயக்கும் உந்துசக்திகளாக அமைந்துவிட்டன. அந்த மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள். சுதந்திரச் சிற்பிகள். தமது மண்ணிலே ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். தமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அவர்கள். இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக தமிழரின் இதயக் கோயிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன் அல்லன். அவன் ஒரு லட்சியவாதி. ஓர் உயர்ந்த லட்சியத்திற்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவன். மற்றவர்களுடைய விடிவுக்காகவும் விமோசனத்திற்காகவும் வாழும் சுயநலமற்ற, பற்றற்ற அவன் வாழ்க்கை உன்னதமானது; அர்த்தம் உள்ளது. சுதந்திரம் என்ற உன்னத லட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அளிக்கத் துணிகிறான். எனவே விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணப் பிறவிகள் என்று தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் பெருமிதத்துடன் கூறினார். இவரின் கூற்று பொய்யாகிவிடக் கூடாது.
முப்பதாண்டு காலப் போராட்டத்தில் 35,000-க்கும் அதிகமான மாவீரர்களைத் தமிழீழம் இழந்திருக்கிறது. இவர்களின் இழப்பு தேசக் கட்டுமானத்துக்கான விதைப்பாகவே தமிழர்கள் கருதி வந்துள்ளார்கள். முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்காக இந்த மாவீரர்கள் பட்ட துன்பங்கள், துயரங்களை எவராலும் இலகுவில் அறிந்து கொள்ள முடியாதவை. மரணத்தை எதிர்கொண்டு வாழ்ந்த பண்பும் மரணத்துக்குச் சவால் விட்டு இலக்கைத் தேடிய பண்பும் இவர்களுடையது. தமிழ்மக்களின் விடுதலைக்காக உயிர் துறந்த இந்த மாவீரர்களைக் காலம் காலமாக நினைவு கூர்ந்து பூசிக்க வேண்டியது தமிழர்களாய் பிறந்த அனைவரினதும் கடமை. ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ்மக்களைப் பாதுகாத்தும் அவர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்தும் எத்தனையோ விதங்களில் அவர்கள் செய்து விட்டுப் போன பணிகளுக்காக நன்றிக் கடனைச் செலுத்தும் வாரம் தான் இந்த மாவீரர் வாரம்.

தாயகத்தில் மாவீரர்களின் எந்தவொரு அடையாளச் சின்னத்தையும் இல்லாமல் செய்து விடுவதில் சிங்களப் பேரினவாதம் வெற்றி கண்டுள்ளது. தாயகத்தில் இருந்த அத்தனை மாவீரர்களின் நினைவாலயங்களும் அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்டு விட்டன. ஈழத்தில் மாவீரர்களை நினைவு கூருவதற்கு சிங்களப் பேரினவாத அரசு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இந்தக் கட்டத்தில் மாவீரர்களை நினைவு கூரும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் மானத்தமிழ் மக்களிடம் தான் உள்ளது. மாவீரர்களின் வரலாற்றைக் கட்டிக் காப்பது தொடக்கம் மாவீரர் நாள் பாரம்பரியங்களை அழிந்து விடாமல் காக்கும் பொறுப்பும் இவர்களுடையதே. இதற்கு ஒன்றுபட்ட வேலைத்திட்டங்களே அவசியம்ஆகின்றது 
தமிழீழ விடுதலைக்கான ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்படுகின்ற நிலைக்கு வந்தபோதும், தமிழீழத் தேசிய விடுதலைக்கான போராட்டத்தை வெவ்வேறு முனைகளில் நகர்த்துவதற்கான உத்வேகத்தை தமிழர்கள் இன்னும் இழந்துவிடவில்லை. தமிழீழத் தேசிய விடுதலைக்கான தேவை இருந்தபோதும், அதனை அடைவதற்காக பல்வேறு முனைகளில் தமிழர்கள் தமது போராட்டத்தை நகர்த்திவருகின்றபோதும், அவர்கள் அனைவரையும் ஒரேபுள்ளியில் சந்திக்கவைக்கின்ற பலம், இறுதிவரை உறுதி குலையாமல் போராடிய மாவீரர்களையே சாரும்.

தான் வாழும் தேசத்திற்காக, தான் நேசித்த மக்களுக்காக தங்களால் செய்யக்கூடிய அதியுச்ச அர்ப்பணிப்பைச் செய்த மாவீரர்களின் வாழ்வும் அவர்கள் தியாகமும் தமிழர்கள் வரலாற்றில் என்றுமே மறக்கக்கூடியதல்ல...


No comments:

Post a Comment