Tuesday, 22 May 2012

நினைவுகள் என் தேசத்தின் மண்ணோடு, காற்றுவெளியோடு, கடை, தெரு, உறவு, நட்பு என்று மூழ்கியிருக்க உடல் மட்டும் இங்கு என் மண்ணின் எல்லை தாண்டி,


அகதி. இது வெறும் ஒற்றைச் சொல்லா அல்லது மனமும் சதையும் சேர்ந்த சொந்தமண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மனிதர்களின் ஏதுமற்றவர்கள் அல்லது யாருமற்றவர்கள் என்கிற உணர்வா? அது உணர்வுகள் மட்டுமல்ல. இதையெல்லாம் தாண்டி எங்களின் அடையாளங்களை தொலைத்து புதிய தேசத்தில் புதிதாய் எதையெதையோ தேடி ஓடும் ஓர் வாழ்வியல் போராட்டம்.
அகராதியின் அகதிக்கான பொருள் விளக்கம் அதன் வலிகளைப் பேசுவதில்லை, உணர்வுகளை விளக்குவதில்லை. அது முடியவும் முடியாது. அனுபவங்களை சொன்னால்  மட்டுமே அதன் வலிகளை புரியவைக்க முடியும். அகதி அனுபவத்தை சொல்ல  எங்கிருந்து எப்படி தொடங்குவது என்று யோசித்தால் நான் எப்படி அகதி ஆக்கப்பட்டேன் என்ற கேள்விக்குள் மீண்டும் தள்ளப்படுகிறேன். ஏன் இப்படி என்று காரணகாரியங்களை எல்லாம் ஆராய்வதில்லை என் பதிவின் நோக்கம்.
நானும் என் போன்றவர்களும் புலம் பெயர்ந்ததின் காரணம் புரியாமல் இருக்காது. போலி ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள், பேரினவாதம் தத்து எடுத்ததில் தறிகெட்டு போய் உயிர் கொல்லும் ராணுவம், சொந்த குடிகளையே ஏய்த்துப் பிழைக்கும் அரசியல்வாதிகளால் சீரழிந்த பொருளாதாரம், ஊழல், நிர்வாக சீர்கேடு, இயற்கை அனர்த்தம் என எனக்குத்தெரிந்து இவையெல்லாம்தான் அகதிகளை உருவாக்கும் காரணிகள்.
ஏதோவொரு காரணத்திற்காய் எத்தனையோ தேசங்களிலிருந்து அகதிகளாய் ஆக்கப்பட்ட மனிதர்கள் இந்த பூமிப்பந்தில் ஆங்காங்கே இறைந்து கிடந்தாலும், பேரினவாதம் என்ற சுனாமியில் சிக்கி சின்னாபின்னப்பட்டு உலகத்து வீதிகளிலெல்லாம் தூக்கி எறியப்பட்ட ஈழத்து அகதிகள் என்ற குப்பைகளில் நானும் ஒருவன் 
ஈழத்தில் என் பாடசாலை நாட்களில் தமிழ் ஆசிரியர் ஒருமுறை சொன்னார் உங்கள் கற்பனையில் ஓர் சடப்பொருள் பேசினால் எப்படியிருக்கும் என்று ஓர் கட்டுரை எழுதுங்கள் என்று. நானும் ஓர் கடிதாசியின் வாழ்க்கை வரலாறு என்று கட்டுரை எழுதி என் ஆசிரியரின் பாராட்டு வாங்கியது ஏனோ இப்போது நினைவில் வருகிறது. இதுவும் அகதி என்ற ஓர் ஜடத்தின் வரலாறு தான். ஆனால், இது பாராட்டுக்காய் எழுதப்படும் கதையோ கற்பனையோ அல்ல.
இன்னும் ஈழத்தமிழன் முட்கம்பிக்குப் பின்னாலும், கடல் நீரால் சூழப்பட்டும் அகதியாய் முடக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறான். 
காடுகளில் மாதக்கணக்கில் ஒழிந்து கிடந்து, கடல் மேல் நூறு நாட்களையும் தாண்டி குறைந்த பட்சம் மனிதர்கள் என்ற அங்கீகாரமேனும் கொடுத்து இலங்கைக்கு எங்களை திருப்பி அனுப்பாதீர்கள் என்று சர்வதேசத்திடம் கெஞ்சுகிறார்கள். ஈழத்தமிழர்கள் என்பதால் அவர்களின் மனிதாபிமான கோரிக்கைகள் கூட அலட்சியத்தோடு புறந்தள்ளப்படுகிறது. சாவிலிருந்து மீண்டு வந்தவர்களை  மீண்டும் வாழ்வா, சாவா என்ற அவலத்திற்குள் தள்ளிவிட்டிருப்பதுதான் சர்வதேசம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் செய்து முடித்த இன்னோர் சாதனை.
எங்கள் மீது “அகதி” என்றதொரு முத்திரையை குத்திவிடுங்கள் நாங்கள் உயிராவது  பிழைத்துக்கொள்கிறோம் என்பதுதான். சர்வதேசத்தின் திரைமறைவு நாடகங்களுக்கும், வாழ்வா சாவா போராட்டத்திற்கும் இடையே இப்படி அவலப்படுவர்களின் வாழ்வும் விடிய வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளீராம். உலகமயமாக்கலில் இந்த பூமி ஓர் “Global Village”. ஆமாம். ஆனால், ஈழத்தமிழன் மரண பூமியிலிருந்து தப்பிப் பிழைத்து ஒதுங்க இடம் கேட்டால் சர்வதேசத்தின் சகல சட்ட விதிகளும் ஈவிரக்கமில்லாமல் அவன் மீது பாய்கின்றன. இந்த கூற்றுகளுக்கும், கூத்துகளுக்கும் நான் சிரிக்கவா, அழவா தெரியவில்லை? சரி விடுங்கள். ஈழத்திலிருந்து நான் கிளம்பிய கதையைச் சொல்கிறேன்.
போரின் வலிகளை எத்தனை நாளைக்குத்தான் தாங்கவும், சுமக்கவும் முடியும்? நாங்களும் மனிதர்கள்தானே.எல்லோருக்கும்  அப்போதெல்லாம் குண்டுச்சத்தங்கள் இல்லாமல் இருந்தாலே நிம்மதியாய் இருக்கும் என்று தோன்றியது. கூடவே, உணவு கூட பேரினவாதத்தின் போராயுதமாய் மாறிய பின் தப்பித்தல் என்பது ஒன்றும் தந்திரோபாயம் என்று தோன்றவில்லை. துன்பங்களிலிருந்து தப்பிக்க நினைப்பது மனித இயல்பு இல்லையா?
வீட்டில் எல்லோருக்கும் எப்படி இவனை அனுப்புவது என்ற கேள்வி பூதாகரமாய் இருக்க எனக்கு மட்டும் “ஏன்” என்ற கேள்வி பதில் தெரிந்திருந்தும் மீண்டும், மீண்டும் என் சிந்தனைகளில் அறைந்து கொண்டே இருந்தது. சினத்தை கிளப்பியது. யாருடனும் பேசக்கூடப் பிடிக்கவில்லை. எல்லாக்காலங்களிலும், எல்லா விடயங்களிலும் என் வீடு என்ன முடிவெடுக்கிறதோ அதுவே என் முடிவல்ல. ஆனாலும், என் வீட்டை எதிர்த்துக்கொண்டு எதையும் செய்யத்துணியும் அளவிற்கு வயதோ அல்லது சமூக, பொருளாதார அங்கீகாரமோ இல்லாத சூழலில் எனக்கும் சேர்த்து என் உறவுகள் முடிவெடுக்க அதற்கு வேண்டா வெறுப்பாக கட்டுப்பட்டேன்.காரணம் இதே வலைப்புவால் ஏற்ப்பட்ட பிரசனை தான் அதை குறிப்பிட நான் இப்போது விரும்பவில்லை 
நிச்சயமாக கொழும்பு சென்று அங்கிருந்து உயிர் தப்பி எங்காவது செல்வது என்பது அந்நாட்களில் குதிரைக்கொம்பாக இருந்தது. அது ஆபத்துகள் நிறைந்த பயணமும் கூட. எனக்கு இருந்த ஒரேயொரு தெரிவு தமிழ்நாடு தான். எப்படி போவது? தெரியாது. அனாலும் எனது இந்திய நண்பனின் அறிவுருதளுடன் இலங்கையில் இருந்த எனது நண்பனின் பண உதவயுடனும் போய் சேர்ந்தேன் 
அப்போதெல்லாம், ஊரில் பேசிக்கொள்வார்கள், இன்னார் இந்தியாவுக்கு தப்பி போயிட்டினமாம் என்று. இன்னார் தமிழ்நாட்டுக்கு சென்று சேரவில்லையாம். ஆகவே, விமானம்  விழுந்து திருக்க வேண்டும் அல்லது சிங்களப்படைகளிடம் மாட்டியிருக்க வேண்டும். உண்மை கரையேறும். உயிர் பிழைத்தால் தமிழ் நாட்டில் இருந்து என் இடம் திரும்பினேன் இன்னும் என்னை சுற்றி அடிக்கும் அலை ஓயவில்லை நான் நேசித்த ஊடகத்தையும் எனது பேனாவையும் என்னால் நிறுத்த முடிய வில்லை பொதுவாக ஆரம்பத்தில் இந்த துறைக்கு வருபவர்கள் நாங்கள் நினைக்கும் சமுகத்தையும் நான் நேசிக்கும் அரசியல் அஸ்தி வாரத்தையும் என்னால் மாற்ற முடியும்  என்ற நோக்கோடு என்னை போல் பலபேர் ஊடகத்தில் நுழைவதுண்டு அனால் நுழைந்தவுடன் எம் எங்கள் எண்ணங்கள்  செயல்கள் எல்லாம் அந்த நிறுவனங்களால் மாற்றப்பட்டு விடும் அப்போது எமது ஊடக துறைக்கும் எமது இலட்சியதிட்க்கும் சேர்த்து நெருப்பு வைக்குறோம் என்னை போல் பலபேர் இதை உணர்ந்து இருக்க கூடும் நான் அதில் இருந்து வெளியில் வந்து வன்னி நிலைமையை எனது புனை பெயரில் எழுதியபோது எதனை மிரட்டல்க எத்தனை அடிகள் ம்ம் எனது நண்பர்களுக்கு கூட தெரியாது நான் ஊடகத்தில் இயங்குவது அனால் எப்படியோ அந்த மோப்ப நாய்களுக்கு தெரிந்து விடும் என்னை போன்றவர்களையும் என் சார்ந்தவர்களையும் மோப்ப நாய்களின் பிடியில் இருந்து தப்பிப்பதட்க்கு அவர்களின் குடும்பங்கள் படும் அவஸ்தை பெரும் பாடு இன்று கடல்கடந்து தேசம் கடந்து உலகின் அடுத்த பக்கத்தில் நிக்கிறேன் எனக்கு விடிகிறபோது என்குடும்பம் துயில்கிறது ....நான் .இங்கு ஓர் அகதி ஈழத்தமிழனின் வியர்வையில் இந்த தேசங்கள் ஈழத்தில் எங்கள் இரத்தம் இங்கு எங்கள் வியர்வை ....
எனக்கும் என் மண்ணுக்கும் இடையேயுள்ள தூரம் என்னை பிரிக்க, என் உயிரும், மனமும் இன்னும், இன்னும் ஆழமாக அதை நேசிக்க, காதலிக்க தொடங்கியது. என் மண்ணோடு எனக்குள்ள பந்தம் எப்படி விடுபட்டுப்போகும்? நினைவுகள் என் தேசத்தின் மண்ணோடு, காற்றுவெளியோடு, கடை, தெரு, உறவு, நட்பு என்று மூழ்கியிருக்க உடல் மட்டும் இங்கு என் மண்ணின் எல்லை தாண்டி, 
குறிப்பு >என் பேனா  மறுபடியும் எழுதுகிறது  

No comments:

Post a Comment